
சென்னை,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுமானால், பாகிஸ்தான் இந்தியாவின் எந்த பகுதிகளை குறிவைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த போர்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதனால் தான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த இடங்களில் போர்கால ஒத்திகை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் இருந்து நம் சென்னையை தாக்க முடியுமா? என்ற கேள்வி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதற்கு பதில் ஆம் என்பது தான். பாகிஸ்தான், அணு ஆயுதங்கள் மற்றும் பலவகைத் தூரநிலை ஏவுகணைகளைக் கொண்ட நாடாகும். குறிப்பாக சாஹீன் - 2 மற்றும் அபபீல் போன்ற ஏவுகணைகள், 1,500 முதல் 2,200 கி.மீ. வரை உள்ள இலக்குகளை தாக்கக்கூடியவை.
பாகிஸ்தானிலிருந்து சென்னை வரை உள்ள தூரம் சுமார் 1,800 கி.மீ. என்பதால், தொழில்நுட்ப ரீதியாக சென்னையை தாக்கும் வாய்ப்பு இருப்பதாக யூகிக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் தற்போது போர்கால ஒத்திகைக்காக தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இரண்டு இடங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மேலாக, இந்தியாவிடம் ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.
ஏவுகணை தடுப்பு முறைகள், முன்னெச்சரிக்கை ரேடார் அமைப்புகள் மற்றும் பதிலடி தாக்குதலை நடத்தும் அளவிற்கு ராணுவ வலிமையும் இருக்கின்றன. இந்த ஒத்திகைகள் உண்மையான தாக்குதலுக்கு முன்னேற்பாடாகவும், அவசர நிலைகளில் நம்முடைய அரசு துறைகளின் செயல்திறனை பரிசோதிக்கும் முயற்சியாகவும் நடத்தப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், தவறான தகவல்களை பகிராமல் இருக்கவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.