
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணியளவில் இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவப்பட்டன.
மொத்தம் 9 இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டனர். அதேவேளை, இந்தியா நடத்திய இந்த அதிரடி ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எம்ரேட்ஸ், ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை கொடுத்த துல்லிய தகவலின் பெயரில் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இதில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது தலைமையகங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. மேலும் மசூத் ஆசாரின் மதரசா அழிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.