
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.
குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
அப்படிப்பட்ட அவர் அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 36 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது பலரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கோலி ஓய்வு பெற்றது குறித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " விராட் கோலி ஓய்வு அறிவித்தவுடன் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதில், 'இந்த முறை உங்களுக்கு எதிராக விளையாட முடியாமல் போவது அவமானமாக உள்ளது' என்று கூறியிருந்தேன். விராட்டுக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்தில் நாங்கள் ஒரே மாதிரியான மனநிலையைப் பகிர்ந்து கொள்வதால், நாங்கள் எப்போதும் போட்டியை ரசித்திருக்கிறோம். அது ஒரு போர்.
இந்தியா தவறவிடப்போவது அவரது களத்தில் சண்டையிடும் குணம், போட்டித்திறன், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம். அவர் 18-வது நம்பரை (விராட் கோலியின் ஜெர்சி எண்) தனக்கென அமைத்துக் கொண்டார். அதை இன்னொரு இந்திய வீரரின் சட்டையின் பின்புறத்தில் நாம் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர் நீண்ட காலமாக ஒரு சிறந்த வீரராக இருந்து வருகிறார்" என்று கூறினார்.