
சென்னை,
தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை, எழுகிணறு, வள்ளலார் வசித்த வீட்டில் சன்மார்க்க கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடு மற்றும் திருவருட்பா 6-ம் திருமுறை பாராயணம் நிகழ்வில் கலந்து கொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடலூரில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை, ஜோதி தரிசனம் அனைத்து பக்தர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக வளர்ந்துவிட்ட கிளைகளை தான் ஒழுங்குபடுத்தினோம். கிளைகளை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்மீகமாக செல்பவர்கள் சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஓரு தாய் மக்கள் என்ற உணர்வோடு செல்வதுதான் ஏற்புடையது. ஆகவே பிளவுபடுத்துகின்ற சக்திகளுக்கு ஆன்மீக அன்பர்கள் செவி சாய்க்காமல் ஆன்மீக பூமி தமிழகம் என்று நிரூபிக்கின்ற வகையில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.
செங்கோட்டையன் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காமல், ஜெயக்குமார் தான் பதில் அளித்துள்ளார். மற்ற இயக்கங்களில் ஊடுருவுவது எங்களுடைய பழக்கம் அல்ல. அதில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதுமே அதை விரும்ப மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
த.வெ.க. தலைவர் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து குறித்து, அமைச்சரிடம் கேட்டே பாது, 'மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்து இருக்கின்றோம். ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிதான் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 2026-ம் ஆண்டு தேர்தலிலும் முதல்-அமைச்சர் கூறியபடி 200 தொகுதிகளையும் தாண்டி உறுதி மிக்க வெற்றியை பெறுவோம். முதல்-அமைச்சர் 2-வது முறையாகவும் ஆட்சிப்பொறுப்பை ஏற்பார் என்றார்.