வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து 2 பேர் காயம் ஆன்லைனில் காற்றாடி, மாஞ்சா நூல் வாங்கி வாட்ஸ்அப் குழு அமைத்து விற்றது அம்பலம்: 2 நாட்களில் 18 பேர் கைது

1 month ago 5

பெரம்பூர்: வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து இருவர் காயம் அடைந்த விவகாரத்தில், கடந்த 2 நாட்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆன்லைனில் பட்டங்கள், மாஞ்சா நூல் வாங்கி வந்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் குழு அமைத்து சென்னையில் விற்றது தெரிய வந்தது. சென்னையில் விடுமுறை காலகட்டங்களில் வானத்தைப் பார்த்தாலே பறவைகள் போல் கூட்டம் கூட்டமாக பட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். ஆனால், நாளடைவில் பட்டம் விடுவதில் ஏற்பட்ட போட்டிகளால், அது மாஞ்சா எனும் கொடிய கயிற்றைக் கொண்டு விளையாடும் விபரீதமாகிப்போனது. விளைவு, அப்பாவி மக்களின் உயிரையும், உடலுறுப்புகளையும் சிதைத்தது மாஞ்சா பட்டங்கள். இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது தமிழ்நாடு அரசு. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவ்வப்போது மாஞ்சா நூலால் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வகையில் கடந்த ஞாயிறுக்கிழமை வியாசர்பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது அடுத்தடுத்து இரண்டரை வயது குழந்தை மற்றும் கறிக்கடைகாரர் ஜிலானி பாஷா ஆகியோரின் கழுத்தை பதம் பார்த்தது மாஞ்சா நூல். இந்த சம்பவம் சென்னையை உலுக்கிய நிலையில், வடசென்னையில் பட்டம் விடுபவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஓட்டேரி, வியாசர்பாடி மற்றும் பேசின்பிரிட்ஜ் போன்ற புளியந்தோப்பு காவல் மாவட்ட போலீசார் தொடர்ச்சியாக பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்யும் வீடுகளில் சோதனை செய்து கடந்த இரண்டு நாட்களில் 18 பேரை கைது செய்தனர்.

நேற்று முன்தினம் வியாசர்பாடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி பகுதியில் தீவிர சோதனை நடத்தி பட்டம் பறக்கவிட்டவர்கள், சிறுவியபாரிகள் என 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நேற்று ஓட்டேரி மற்றும் பேசின் பிரிட்ஜ் போலீசாரால் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த குருகோகுல், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயபால், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த மகேஷ், ராஜேஷ், ஹரிஹரன், ராஜசேகர் ஆகிய 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டில் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் தடை செய்யப்பட்டு இருப்பதால், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் குழு மூலமாக ஜெய்ப்பூரில் இருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட குரு கோகுல் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டிலேயே மாஞ்சா நூல் தயார் செய்து விற்பனை செய்து வருவதும், இவர் காற்றாடிகள் தொடர்பான போட்டிகள் நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக வாட்ஸ் அப் குழுவில் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் கேட்டால் இவர்களுக்கு சப்ளை செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதற்காக காற்றாடி பிரியர்கள் என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி அதனை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. காற்றாடி விற்பனை செய்பவர்களின் குருவாக கைது செய்யப்பட்டுள்ள ஜெயபால் என்பவர் இருந்துள்ளார். வடசென்னை பகுதியில் தொடர்ந்து காற்றாடி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் நடக்கும் காற்றாடி போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அதேபோல ராஜேஷ் ஜெய்ப்பூரில் இருந்து காற்றாடி மற்றும் மாஞ்சா நூலை வாங்கி விற்பனை செய்துள்ளார். இவரிடமிருந்து 300க்கும் மேற்பட்ட காற்றாடிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மகேஷ் வீட்டில் மாஞ்சா காய்ச்சி நூல் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடோன் மற்றும் வீடுகளை தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்ட போது 500க்கும் மேற்பட்ட காற்றாடிகள், 200க்கும் மேற்பட்ட லோட்டாய்கள், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிஷின்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தடை செய்யப்பட்டுள்ள பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

The post வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து 2 பேர் காயம் ஆன்லைனில் காற்றாடி, மாஞ்சா நூல் வாங்கி வாட்ஸ்அப் குழு அமைத்து விற்றது அம்பலம்: 2 நாட்களில் 18 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article