திருச்சி, பிப்.6: தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வேலு தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழகத்தில் உள்ள 13 மணல் குவாரிகளை தமிழக அரசு விரைந்து போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் கடந்த 2023 செப்.12ம் தேதி அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைக்கு பிறகு மணல் குவாரிகள் கிடங்குகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5 ஆயிரத்திறகும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் இயக்கப்படாமல் வேலை வாய்ப்பை இழந்துள்ளது. எனவே வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதனை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேசமயம் எம்.சேண்டு ரூ.5ஆயிரத்திற்கு, பி.சேண்டு ரூ.6ஆயிரத்திற்கும் விற்பனை செய்கின்றனர். எனவே தமிழக அரசு 13 குவாரிகளையும் உடனடியாக திறந்து வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாழும் பல தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும். அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த மனு அளிக்கும் போராட்டத்தில் துணை தலைவர்கள் சாகுல் அமீது, கிருஷ்ணமூர்த்தி, சங்கர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
The post மணல் குவாரிகளை திறக்க கோரி மனு அளிக்கும் போராட்டம் appeared first on Dinakaran.