
இந்தி சினிமா பாடலாசிரியர் மற்றும் உருது கவிஞராக விளங்குபவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் வெளிப்படையாகப் பேசியிருக்கும் கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. திரைக்கதை கதாசிரியர், எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர் என பன்முகத் தன்மை கொண்டவரான ஜாவேத் அக்தர், மூத்த அரசியல் தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான கபில் சிபலுடனான நேர்காணலில் பேசியிருப்பதைப் பார்க்கலாம்:
"திரைத்துறையைச் சேர்ந்தோர் உள்பட பல பிரபலங்கள் அமைதி காத்து வருவதைக் காண முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் அனைவரும் சோதனை முகமைகளின் ரெய்டு நடவடிக்கைகளுக்கு பயப்படுகிறார்கள். வருமான வரித் துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளின் விசாரணை நடவடிக்கைகள் தங்கள் மீதும் திரும்புமோ என்ற அச்சம் அவர்கள் மனதில் குடிகொண்டுள்ளது. இது உண்மையா என்று ஆனித்தரமாகச் சொல்ல முடியாவிட்டாலும், இந்த மனநிலை அவர்களிடம் இருக்கிறதென்றே தோன்றுகிறது.திரைத்துறையானது தொழிலதிபர்களின்கீழ் இயங்குகிறது.
அப்படியிருக்கும்போது, ஹாலிவுட்டுடன் இந்திய திரைத்துறையை ஒப்பிடும்போது, மேரில் ஸ்ட்ரீப் அமெரிக்க அரசுக்கு எதிராகப் பேசியுள்ளார். ஆனால், அவர் மீது வருமான வரித் துறை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.இந்த அச்சம் ஒருவரது மனதில் நிலைத்திருந்தால், தங்கள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணையும் நடத்தப்படலாம் என்கிற எண்ணம் தோன்றும், இதுகுறித்த கவலையும் சூழும். .திரைத்துறை மட்டுமன்றி நாடெங்கிலும் இந்த அச்ச உணர்வு நிலைபெற்றுள்ளது.பாலிவுட் நட்சத்திரங்கள் என்னதான் பிரபலமடைந்திருந்தாலும், அவர்களும் பிறரைப் போலவே இந்த சமூகத்தில்தான் வசித்து வருகிறார்கள். ஆகவே அவர்களும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்றார்.
அரசுக்கு எதிரான விமர்சனங்களை துணிச்சலாக முன்வைக்க தயங்காத ஜாவேத் அக்தர், கடந்த 1999-ஆம் ஆண்டு 'பத்ம ஸ்ரீ', அதனைத்தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு 'பத்ம பூஷன்' ஆகிய நாட்டின் இருபெரும் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகை கங்கனா ரணாவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.