
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது.
சி.பி.ஐ. விசாரணையை அடுத்து, இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என கடந்த 28-ந் தேதி நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
அதன்படி இன்று தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக அவர்கள் சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 10 மணியளவில் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது. கைதானவர்களுக்கு எந்த மாதிரியான தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் இதுவரையிலும் ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்று நேரில் ஆஜர்படுத்தப்படுவதை ஒட்டி கோவை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.