விமானப்படை நிகழ்ச்சி: பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரிடம் முழுமையாக விட்டிருக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

3 months ago 23

சென்னை,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய விமானத்துறை சார்பாக விமான சாகச நிகழ்ச்சிகள் சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் மக்கள் வியக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. விமான படையினுடைய தற்கால திறமையான தொழில்நுட்பங்களை விமான படை வீரர்கள் வானத்தில் காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள். அதை பார்க்கும் பொழுது எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் மாலையில் 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி மொத்த தமிழர்களையும் வேதனை பட வைத்திருக்கிறது.

இதைவிட அதிகமான கூட்டங்களை தமிழக காவல்துறை மிக திறமையாக கையாண்டு இருப்பதை நாம் அறிவோம். ஆனால் நேற்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் விமானப்படை அதிகாரிகளும், தமிழக காவல்துறையும் இணைந்து செயல்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. விமானப்படை அதிகாரிகள் என்ன கேட்டார்களோ அதை செய்து கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. விமானப்படை அதிகாரிகள் சாகச நிகழ்ச்சிகளை மட்டும் அவர்கள் பொறுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கூடுகிற பார்வையாளர்களுடைய பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை தமிழக காவல்துறையினரிடம் முழுமையாக விட்டிருக்க வேண்டும்.

மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற விமானப்படை அதிகாரிகள் தமிழக கவர்னரிடம் அதிகப்படியாக தொடர்பு கொண்டு அவருடைய அறிவுரைகளை கேட்டிருப்பார்களோ என்ற ஐயம் எழுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசு அதிகாரிகளிடம் இல்லாமல் இருந்ததை உணர முடிகிறது. இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியின் முடிவு உயிரிழப்பிலே முடிந்திருப்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்தார்களா அல்லது கவர்னர் ஆலோசனைப்படி விமானப்படை அதிகாரிகள் செய்தார்களா என்பதை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அந்த தெளிவில்லாமல் விமானப்படை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு அதிகாரிகளுக்கும் இடையேயான தகவல் குறைபாடுகளே இந்த விபத்திற்கு காரணமாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கின்ற குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article