
காஞ்சீபுரம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள் கருடசேவையும், ஆனி மாதம் ஆனி கருட சேவையும், ஆடி மாதம் ஆடி கருடசேவையும் என ஆண்டுக்கு 3 முறை கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஆனி மாதத்தையொட்டி இன்று ஆனி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி வரதராஜப்பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிவப்பு, நீலம் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ மனோரஞ்சித பூ மல்லிகைப்பூ உள்ளிட்ட மலர் மாலைகள், திருவாபரணங்கள், முத்து கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் மஞ்சள் பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் தூப தீப ஆரத்தி காட்டியதை தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ஆழ்வார் பிரகாரத்தில் வலம் வந்து, மேளதாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர், பஜனை கோஷ்டிகள் பாடிவர 4 மாடவீதிகளில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.