
நெல்லை,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
உயர்கல்வித்துறையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைவிட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டு உள்ளதால் 64 கல்லூரிகளில் 2 ஷிப்ட் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. 4 மாதங்களில் 15 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 15 சதவீதம் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். கடந்த ஆண்டு 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில், தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர் 2 ஆயிரம் விரிவுரையாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 10 நாட்களில் 1,500 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமத்தப்படுவார்கள். நிரந்தர பேராசிரியர் பணியிடங்களுக்கு 4 ஆயிரம் பேரை நியமிக்க தேர்வு நடத்த திட்டமிட்டோம். இதற்கிடையே நீதிமன்ற தடையாணையால் நிலுவையில் உள்ளது. விரைவில் அதற்கும் தீர்வு காணப்படும்.
திருப்புவனம் காவலாளி மீது புகார் கூறிய பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.