திருச்சி,
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.
விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன்பின்னர், தரையிறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், விமானம் தொடர்ந்து வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. இந்நிலையில், விமானம் 8.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 144 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகள் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு(டி.ஜி.சி.ஏ.) மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.