
சென்னை,
தென்மேற்கு பருவமழை தொடங்கி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வெப்பச்சலன மழை பெய்கிறது. அந்தவகையில் கடந்த மாதம் (ஜூன்) இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது.
அதன் தொடர்ச்சியாக இம்மாதத்தில் மழை, வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென் இந்திய பகுதிகளில் ஜூலை மாதத்தில் வெப்பநிலை இயல்புக்கு அதிகமாகவும், மழை இயல்புக்கு குறைவாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, 'ஜூலை மாதம் 15-ந்தேதி வரை தமிழ்நாட்டில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும். கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக இல்லாத சூழல், தொடர்ச்சியாக வறண்ட வானிலை போன்ற காரணங்களால் இந்த உணரும் வெப்பநிலை ஏற்படுகிறது.
2-வது வாரத்துக்கு பிறகு தென்மேற்கு வங்கக்கடலில் காற்று சுழற்சி உருவாகி, அது ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். அது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மழை இருக்கும். அதேபோல், தென்மேற்கு பருவமழையும் 2-வது வாரத்துக்கு பிறகுதான் மீண்டும் தீவிரம் அடையும். இதே மாதிரியான நிலைதான் ஆகஸ்டு மாதத்திலும் இருக்கும்' என்றார். இதேபோல் மற்ற வானிலை ஆய்வாளர்களும் பகல் நேரம் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றே தெரிவித்துள்ளனர்.