
பாகு,
ரஷியாவின் யூரல் நகரில் அசர்பைஜானைச் சேர்ந்த மக்களின் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள வீடுகளில் போலீசார் சிலர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் விசாரணை என கூறிக்கொண்டு அந்த வீட்டில் பலரை அடித்து இழுத்துச் சென்றனர். அப்போது போலீசார் சரமாரியாக தாக்கியதில் 2 பேர் பலியாகினர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு அசர்பைஜான் அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷிய துணை பிரதமர் அலெக்சி ஓவர்சுக்கின் வருகையை ரத்து செய்வதாக அசர்பைஜான் அரசாங்கம் அறிவித்தது. மேலும் தங்களது நாட்டில் ரஷிய அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள அனைத்து கலாசார நிகழ்ச்சிகளையும் அசர்பைஜான் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.