சென்னை: விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு தற்போதைய சந்தை மதிப்பை மறுஆய்வு சமர்ப்பிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை மேம்பால சாலையுடன் இணைத்து நீடிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத் துறை செயலாளர் கோபாலிடம் மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில்,
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க ரூ.9,335 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் சென்னை விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து, நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு கடந்த ஏப்ரல் 24ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கோரி ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் நீட்டிப்பு பகுதியின் தற்போதைய சந்தை மதிப்பை மறுஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையுடன் மீண்டும் சமர்ப்பிக்க ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ேரா அதிகாரிகள் கூறியதாவது: நகர்ப்புற போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (குமடா) தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்து வருகிறது. இதனால் விரிவான திட்ட அறிக்கையில் எந்த மாற்றங்களும் இருக்காது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு; தற்போதைய சந்தை மதிப்பை மறுஆய்வு செய்ய ஒன்றிய அரசு உத்தரவு: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.