விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

3 months ago 19

*சாத்தான்குளத்தை சேர்ந்தவர்

சாத்தான்குளம் : பைக் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவடைந்த மரக்கடை ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாகு மகன் மந்திரமூர்த்தி என்ற நயினார் (50). இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

மந்திரமூர்த்தி திசையன்விளையில் உள்ள மரக்கடையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10ம் தேதி திசையன்விளையில் நடந்த பைக் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை செயல்பாடு இருப்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கையில் மந்திரமூர்த்தி மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் அவருடைய உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மந்திரமூர்த்தியின் உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகளை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர். நேற்று முன்தினம் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்கூராய்வு செய்யப்பட்டு மந்திரமூர்த்தி உடலை நேற்று (ஞாயிறு) காலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். மந்திரமூர்த்தி உடலுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதிபாலன் தலைமையில் கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் மந்திரமூர்த்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அவரது உடல் புதுகுளத்திற்கு அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாரன், சாத்தான்குளம் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜாஸ்மின் மேரி, கந்தவல்லி குமார், முத்துராமலிங்கம், பிரம்ம கனி, புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலமேனன் ஆகியோர் மந்திரமூர்த்தி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Read Entire Article