சென்னை: “இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது. சாதி, மத, மொழி அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வர நாட்களாகும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சாதி, மத, மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது என்பது ஊழல் நடவடிக்கை. வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேர்தல் காலகட்டங்களிலும், தேர்தல் அல்லாத நேரங்களிலும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அந்த கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக சாதி, மத, மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுகின்றனர்.