ஊழிப் பிரளயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம். பிரளயம் முடிந்து மறுபடி உலகம் தோன்றியது. எல்லா உயிர்களும் அழிந்து மறுபடியும் உலகம் தோன்றிவரும் நேரத்தில் நவகிரகங்கள் இந்த பூமியில் பிரளய வெள்ளத்தில் ஏதேனும் ஒரு இடம் அழியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்காக வந்தனர்.
ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வில்வமரம் பிரளய காலத்தின் பாதிப்பிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்ததைப் பார்த்து வியந்தனர். இந்த இடம் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த இடம்.
ஈசனின் சாந்நித்யம் உள்ள இடம் என்று எண்ணிய நவகிரகங்கள், ஒவ்வொருவரும் அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினர். அப்படி நவகிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்ட லிங்கங்களை நவகிரகலிங்கங்கள் என்று அழைத்தனர்.
சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குருலிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வரலிங்கம், ராகுலிங்கம், கேது லிங்கம் என்று, இந்த லிங்கங்கள், வரிசையாக சிறியதும் பெரியதுமாக, கோயில் பிரகாரத்தில் காட்சிதரும் மாட்சி, வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் இந்த லிங்கங்கள் சிவனோடு ஐக்கியமாகிவிடுவதாக ஐதீகம். இங்கே நவகிரகலிங்கங்கள் என்று தனியாக இருந்தாலும், வழக்கம் போல நவகிரக மண்டபத்தில் நவகிரகங்கள் உண்டு.
இப்படி அமைத்த தலம்தான் திருத்தெங்கூர் ரஜதகிரீஸ்வரர் எனப்படும் வெள்ளிமலைநாதர் ஆலயம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயம் மிகப்பழமையான ஆலயமாக கருதப்படுகின்றது ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து, உலகம் கொள்ளப்பட்டும், இத்தலத்தில் மட்டுமே தெளிந்த நீர் தேங்கி நின்றதால் ‘தேங்கூர்’ என்று பெயர் பெற்றது என்பது தலபுராணச்செய்தி. தென்னை வளம்பெற்ற ஊராதலின் ‘தெங்கூர்’ எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர்.
இந்த தலத்தில், மூலமூர்த்தியையும், அம்பாளையும் வணங்கி, நவக்கிரக லிங்கங்களையும் வணங்குவோர்க்கு ஒன்பது கிரகங்களால் வரக்கூடிய ஜாதகதோஷங்கள் அணுகுவதில்லை.
மாறாக ஒன்பது கோள்களும் தங்கள் காலத்தில் அவர்களுக்கு அருளை வாரிவாரி வழங்குகின்றன.
எந்த ஒரு ஜாதகத்திலும் ஏதேனும் சில கோள்கள் நல்ல அமைப்பிலும், ஏதேனும் சில கோள்கள் தீமை தரும் அமைப்பிலும் இருப்பது நியதி.
ஒன்பது கோள்களும் உத்தமமான நிலையில் ஒரு ஜாதகத்தில் அமைந்திருக்க வாய்ப்பே இல்லை. அதனால் பிறந்த ஜாதகப்படி, ஒவ்வொருவரும் நன்மைதரும் அமைப்பினால் நன்மைகளையும், தீமைகள் தரும் அமைப்பினால் தீமைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இங்கு வந்து நவகிரகங்களை வணங்கி வழிபடுவோர்க்கு நவகிரகங்கள் நன்மைகளை கூடுதலாகவும், தீமைகள் வரும்போது அதிக அளவு பாதிப்பு செய்யாமலும் இருக்கும். இங்கே சுயம்புமூர்த்தியாக ஈசன் காட்சி தருகிறார். இந்த தலத்துக்கு ரஜதகிரி என்று பெயருண்டு.
ரஜதம் என்பது வடமொழியில் வெள்ளியைக் குறிக்கும்.
கிரி என்பது மலையைக் குறிக்கும்.
அதனால் இந்த தலத்துக்கு வெள்ளியங்கிரி என்றும் ஒரு பெயர் உண்டு.
மிகப்பழமையான இக்கோயிலில் சோழர்காலக் கல்வெட்டுகள் நான்கும், பாண்டியரது ஒன்றும் உள்ளன.
மூன்றாம் ராஜராஜன் மூன்றாம் குலோத்துங்கன். மூன்றாம் ராஜேந்திரன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு விளக்கெரியவும், விழா எடுக்கவும் நிபந்தங்கள் அளித்த செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
மேற்கு நோக்கிய சிவலிங்க. ஆவுடையார் வடக்கு நோக்கி இருக்கும். கிழக்குநோக்கி காட்சி தருகின்ற ஈசனைவிட மேற்கு நோக்கிய ஈசன் பல மடங்கு கருணை மிக்கவராக விளங்குவான் என்கின்ற நம்பிக்கை உண்டு.
வாமதேவர் என்கின்ற மிகச்சிறந்த யோகீஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகின்ற சிவனை தரிசித்தால், மற்ற ஆலயங்களை தரிசித்து பெரும் பலனைவிட ஆயிரம் மடங்கு பலன் தரும் என்று உறுதியாக சொல்லு கின்றார்.
பழமையான கோயிலாக இருந்தாலும் எளிமையான கோயில்.
மற்ற கோயில்கள்போல இந்த ஆலயத்திற்கு மிகச்சிறந்த உற்சவங்கள் என்று சொல்லும்படியாக எதுவும் நடப்பதில்லை என்றாலும்கூட வைகாசி விசாகத்தை யொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
காவிரியின் தென்கரை சிவாலயங்களில் இது 116 வது சிவாலயம்.
இராஜகோபுரமில்லை. கொடிமரமில்லை-கொடி மரத்து விநாயகர் உள்ளார். நந்தி பலிபீடங்கள் உள்ளன.
வலப்பால் அம்பாள் சந்நதி உள்ளது.
தனிக்கோயில், உள்வாயிலைத் தாண்டிச் சென்றால், நேரே மூலவர் தரிசனம். பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவகிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவகிரக சந்நதி முதலிய வகைன் உள்ளன. நடராஜ சபை உள்ளது. பைரவர், சூரியன் சந்நதிகளும் உள்ளது.
துவாரபாலகர்களையும், விநாயகரையும், சுப்பிரமணியரையும் வணங்கி உட்சென்று மூலவரைத் தரிசிக்கின்றோம்.
சற்று உயர்ந்த பாணமுடைய சிவலிங்கத் திருமேனி.
கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தனவிநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
அப்பர் பாடுகின்றார்.
“ஒரு சிறிய துளியாகக் கருவில் புகுந்தேன். அங்கு குழம்புப்பிண்டமாக இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கருநரம்பும், வெள்ளை எலும்பும், மூளையும் என எல்லாம் சேர்ந்த ஒரு உருவமாக மாறி, தாயின் கருவறையில் இருந்து புறப்பட்டேன். அவளால் வளர்க்கப்பட்டு வெளியே வந்தேன். இப்போது உன் முன் நிற்கிறேன். உன்னடி பணிந்த எனக்கு மறு பிறப்பு வருவதற்கு வழி இல்லை. அப்படி ஒருகால், பிறப்பு உண்டாகில், திருவாரூர் மணவாளா! திருத்தெங்கூர் செம்பொன்னே! உன்னை மறவாமல் நான் இருக்கவேண்டும்’’ என்று இத்தலத்து ஈசனைப் பாடுகின்றார்.
மனதை உருக்கும் அந்த பாட்டு இது.
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.
இந்த ஆலயத்திற்கு வருகை தந்த திருஞானசம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் இந்த ஆலயத்தைப் பாடியிருக்கிறார்.
“இங்கு எழுந்தருளி இருக்கின்ற ஈசன் வினைகளைத் தீர்த்து நம்மை ஆட்கொள்ளும் புண்ணியன். ஒரு காலத்தில் பாற்கடல், கடைந்தபொழுது, அங்கு தோன்றிய ஆலகால விஷத்தை அருந்தி அன்பர்களின் துயர் தீர்த்தவன். முப்புரம் எரித்தவன். இவ்வளவும் செய்துவிட்டு, இன்று அன்பர்களுக்காக, வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் தேங்கூரில் வந்து அமர்ந்தவன்” என்று மிக அழகாக படுகின்றார்.
‘‘புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால் கடல் நஞ்சையுண்டவர் கருதலர் புரங்கள்
நிரைசெய்து ஆரழலூட்டி யுழல்பவர் இடுபலிக்கெழில் சேர்
விரைசெய் பூம்பொழில் தேங்கூர் வெள்ளியங்குன்ற மர்ந்தாரே’’
(சம்பந்தர்)
அம்மனுக்கு தனி சந்நதி உண்டு. அம்மனுக்கு பெரிய நாயகி என்று பெயர்.
இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக தென்னை மரமும், வில்வ மரமும் விளங்குகிறது. தீர்த்தம் சிவகங்கை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு வருகை தரும் அன்பர்கள் இறைவனை குளிரக்குளிர அபிஷேகம் செய்யலாம். அம்பாளுக்கும் ஈசனுக்கும் வஸ்திரங்களைச் சமர்ப்பணம் செய்வதன் மூலமாக மிகச்சிறந்த பலனைப் பெறலாம். மகாலட்சுமி நிலைத்து அருள் தரும் தலமாக இத்தலம் கருதப்படுவதால், இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியங்களும், மகாலட்சுமியின் அருளால் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. காரணம், மகாலட்சுமி தாயார் தவம் செய்த தீர்த்தக்கரை உண்டு. இப்பொழுது, இந்தத் தீர்த்தத்தில் தண்ணீர் இல்லை என்றாலும், ஒரு காலத்தில் மிக குளிர்ச்சியான தண்ணீரில் வெண்தாமரையும், சிவந்த தாமரைகளும் நிறைய பூத்து அற்புதமாகக் காட்சி தந்ததை இவ்வூர் மக்கள் சொல்லுகின்றனர்.
எப்படிச் செல்வது?
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் ‘நெல்லிக்கா’ என்று கைகாட்டி உள்ள திசையில் திரும்பி, திருநெல்லிக்கா சென்று, அங்கிருந்து 2கி.மீ. உள்ள இத்தலத்தையடையலாம். தனிப்பேருந்தில் செல்வோர், கோயில்வரை செல்லலாம். பொதுப் பேருந்துப் பயணம் மேற்கொள்வோர், ‘நெல்லிக்கா’ கைகாட்டி உள்ள இடத்தில் இறங்கி நடந்து வரவேண்டும்.
கோயில் நேரம்: காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு. ரஜதகீரீஸ்
வரர் தேவஸ்தானம்
அருள்மிகு. வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
திருத்தங்கூர் – திருநெல்லிக்காவல் அஞ்சல் – 610 205.
திருத்துறைப்பூண்டி வட்டம் – திருவாரூர் மாவட்டம்.
The post வினைகளைத் தீர்க்கும் வெள்ளியங்கிரி appeared first on Dinakaran.