விதைப்பண்ணையால் விளைச்சல் அள்ளிய பொள்ளாச்சி விவசாயி

3 months ago 9

சிறுதானியப் பயிர்களில் மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்த பயிர் என கம்பைச் சொல்லலாம். தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்ததாக பயிரிடப்படும் உணவுப் பயிரும் கம்புதான். இது குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட கம்பு அதிகமான சத்துப் பொருள்களைக் கொண்டதாக இருக்கிறது.அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச் சிறந்த தானியமாக விளங்குகிறது. சிறுதானியங்களைக் கொண்டு முறுக்கு, பிஸ்கட், சத்துமாவு உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய இன்று பல தொழில்முனைவோர்கள் முன்வந்திருக்கிறார்கள். அவ்வாறு சிறுதானியப் பயிர்களை மதிப்புக்கூட்ட விரும்புகிறவர்களுக்கு கம்புதான் சிறந்த தேர்வு. இதில் மால்ட், சூப்பு, லட்டு உள்ளிட்டவற்றை தயாரித்து சந்தைப்படுத்தலாம். மேலும் கால்நடைகளுக்கு கம்புப்பயிர் சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பயன்தரும் கம்புப் பயிரைப் பயிரிட்டு, பல்வேறு வகை களில் விற்பனை வாய்ப்பைப் பெறலாம்.

கம்புப்பயிரை விதைப்பண்ணை அமைத்து, தரமான விதைகளை உற்பத்தி செய்து, வேளாண்மைத் துறைக்கே விற்கலாம் என்கிறார் பொள்ளாச்சி வட்டாரத்தைச் சேர்ந்த வே.நாராயணசாமி என்ற விவசாயி. உணவு மற்றும் ஊட்டச் சத்துகள் திட்டத்தின் கீழ் கம்புப் பயிரைச் சாகுபடி செய்து பலனடைந்த அவரைச் சந்தித்தோம். “பொள்ளாச்சி பக்கத்தில் உள்ள கூளநாயக்கன்பட்டிதான் எனக்கு சொந்த ஊர். இந்த கிராமத்தில் 2.5 ஏக்கர் பரப்பில் பயறு வகைகள், நிலக்கடலை, காய்கறி போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்கிறேன். மேலும் கறவை மாடுகளும் வளர்த்து வருகிறேன். 15 வருடமான விவசாயம் செய்தபோதும், தற்போது உள்ள நவீன காலத்திற்கு ஏற்றார் போல் சாகுபடி செய்தால்தான் அதிக மகசூல் பெற முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். வெறும் கம்பு விதையினை விற்பனை செய்வதால் குறைந்த விலைதான் கிடைக்கும். அதுவே விதைப்பண்னை அமைத்து தரமான விதையினை உற்பத்தி செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இதற்கு குறைந்த நீர்ப்பாசனம் கொடுத்தால் போதும். பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். இதையெல்லாம் வேளாண்மைத் துறையினர் எனக்கு எடுத்துக் கூறி விதைப்பண்ணை அமைக்க ஊக்கப்படுத்தினர்.

ஜூலை மாதத்தின் கம்பு சாகுபடி பட்டத்தில் 5 கிலோ விதையினை 1.5ஏக்கர் நிலத்தில் விதைத்தேன். மேலும் விதையினை தேசிய உணவு மற்றும் ஊட்டச் சத்துகள்- சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் செயல் விளக்கத் திடல் மூலம் விதை, திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவை மற்றும் இயற்கை உரங்களை மானிய விலையில் பெற்றதால் என் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் செலவு குறைந்தது.சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்பாடுகள் குறித்து ஆட்மா திட்டத்தின் மூலம் பயிற்சிகள் கொடுத்தார்கள். இதன்மூலம் சாகுபடி செலவுகள் மற்றும் உரச் செலவுகளும் வெகுவாக குறைந்தது. 95ம் நாளில் கம்புப் பயிரினை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்ததில் ஆட்களின் தேவையும் குறைந்தது. அறுவடையில் 3370 கிலோ விதைகள் மகசூலாக கிடைத்தது. மேலும் கம்புத் தட்டைகள் சிறப்பான அளவில் கிடைத்ததால் எனது கறவை மாடுகளுக்கான தீவனச் செலவும் குறைந்தது.

ஒரு கிலோ கம்பு தற்போது வெளிச்சந்தையில் 30 ரூபாய்க்குத்தான் வாங்கப்படுகிறது. வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் டான்சீடா முகமையின் மூலம் ஒரு கிலோ விதையினை 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்தார்கள். மேலும் தேசிய உணவு மற்றும் ஊட்டச் சத்துகள் திட்டத்தின் மூலம் உற்பத்தி மானியமாக ஒரு கிலோவிற்கு 25 ரூபாயும் எனக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கம்பு சாகுபடியில் நல்ல மகசூல் பெற்றதால் கோவை மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டிக்கு என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இது எனக்கு மேலும் ஊக்கம் தருவதாக இருக்கிறது’’ என மகிழ்ச்சி பொங்க கூறினார்.
தொடர்புக்கு:
நாராயணசாமி: 91507 91599.

மற்ற தானியங்களைக் காட்டிலும் கம்பில்தான் அதிக அளவிலான புரோட்டீன் சத்து (11.8 சதவீதம்) நிறைந்திருக்கிறது. கண் பார்வை மற்றும் தோல் பராமரிப்புக்கு உதவிபுரியும் விட்டமின் `ஏ’வை உருவாக்கும் பீட்டா கரோட்டீனும் கம்பில் அதிகளவில் நிறைந்திருக்கிறது.

தற்போது ஸ்டார் ஹோட்டல்களில் கூழ் முக்கிய மெனுவாகி இருக்கிறது. அதிலும் கம்பங்கூழுக்கு நல்ல மார்க்கெட் உருவாகி இருக்கிறது.

 

The post விதைப்பண்ணையால் விளைச்சல் அள்ளிய பொள்ளாச்சி விவசாயி appeared first on Dinakaran.

Read Entire Article