
சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, மாதவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சார்நிலைக்கருவூலம் அமைக்கப்படும் என்றும், பொன்னேரி வட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, வட்டங்கள் பிரிப்பதற்கான கோரிக்கை பேரவையில் பல உறுப்பினர்கள் விடுத்துள்ளனர். நிதிநிலைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்ற தொகுதி மறுவரை கூட்டத்தை முக்கிய மாநில முதல்-மந்திரிகளை கொண்டு சிறப்பாக நடத்தினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த கோரிக்கையும் கனிவோடு நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், பவானிசாகர் ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்க சாயப்பட்டறைக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பவானி ஆற்றங்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த ஆலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என ஏற்கனவே புகார் வந்திருப்பதாகவும் கூறினார். ஆலைகளில் வெளியேறும் கழிவுநீரை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி நடைபெறும் எனவும், விதிகளை மீறினால் அந்த ஆலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.