
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதி ராஜாவின் மகன் மனோஜ் . இவர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து மனோஜ் "சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் மனோஜ் அவரது வீட்டில் நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல், நீலாங்கரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரைத்துறையினர் பலர் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மனோஜ் மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் புதல்வரும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரையுலகில் சாதனைகளை படைத்திருக்க வேண்டிய மனோஜ் இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாசம் காட்டி வளர்த்த மகவை இழந்து தவிப்பது பெரும் சோகமாகும். மகனை இழந்து வாடும் இயக்குனர் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.