விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

16 hours ago 1

புதுடெல்லி,

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த பணியானது டாக்கிங் எனப்படுகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது.

இதனை தொடர்ந்து, அந்த இரு செயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தி, விண்வெளியில் அவற்றை இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டது.

இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி கடந்த டிசம்பர் 30-ந்தேதி விண்ணில் பாய்ந்தது.

திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தன. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இதன்படி இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டு, பின்னர் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியானது, கடந்த 16-ந்தேதி வெற்றி பெற்றது. இதனை இஸ்ரோ தெரிவித்தது. டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வெற்றி பற்றி குழுவினர் விரிவாக தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். தரவுகள் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, டாக்கிங் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்தது. இது ஒரு வரலாற்று தருணம் என்றும் குறிப்பிட்டது.

இதுபற்றி இஸ்ரோ வெளியிட்ட மற்றொரு செய்தியில், ஸ்பேடெக்ஸ் டாக்கிங் முறையில் நாம் பயணிப்போம் என தெரிவித்ததுடன், 15 மீட்டர் தொலைவில் இருந்து 3 மீட்டருக்கு செயற்கைக்கோள்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. துல்லிய தன்மையுடன் டாக்கிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி வெற்றியடைந்து உள்ளது.

அவற்றை நிலைப்படுத்தும் பணியும் வெற்றி பெற்று உள்ளது. ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தியாவுக்கும் வாழ்த்துகள் என அதுபற்றி இஸ்ரோ தெரிவித்தது.

இதேபோன்று, செயற்கைக்கோள்களை இணைத்த பின்னர், அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கிற நாட்களில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் பணி மற்றும் மின்சார பரிமாற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ இன்று அறிவித்தது.

இதுபற்றி மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வோர் இந்தியனுக்கும் இந்த நிகழ்வு மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

வருங்காலத்தில் பாரதீய அந்திரிக்சா நிலையம், சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களை எளிதில் மேற்கொள்ள வழியேற்படுத்தும் வகையில் உள்ளது என தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியால் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவானது, மனவுறுதியை அதிகரிக்க செய்கிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Congrats team #ISRO. And heartening for every Indian !#SPADEX Satellites accomplished the unbelievable De-Docking… This paves the way for smooth conduct of ambitious future missions including the Bharatiya Antriksha Station, Chandrayaan 4 & Gaganyaan. PM Sh @narendramodi's…

— Dr Jitendra Singh (@DrJitendraSingh) March 13, 2025

Spadex Undocking Successful! Key sequence of events:✅ SDX-2 extension successful✅ Capture Lever 3 released as planned✅ Capture Lever in SDX-2 disengaged✅ Decapture command issued in SDX-1 & SDX-2 FINALLY, SUCCESSFUL UNDOCKING!Congratulations, Team ISRO! …

— ISRO (@isro) March 13, 2025
Read Entire Article