
சென்னை,
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்களின் நிலம்-மனை உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் பதிவு மற்றும் நகல் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றின் கட்டணங்கள் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.
கடந்த 2023-24-ம் நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை ரூ.18 ஆயிரத்து 800 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்து இருந்தது. தற்போது அந்த சாதனையை விஞ்சி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையாக ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை நேற்று எட்டி பிடித்துள்ளது.
எற்கனவே இந்த மாதம் மாசி மாதம் என்பதால் பத்திரப்பதிவுகள் அதிகம் நடக்கிறது. எனவே வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்தாண்டு 33.3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த 2024-25-ம் நிதியாண்டில் இதுவரை 32 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்தாலும் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. இந்த நிதியாண்டு, அதாவது மார்ச் மாதம் முடிய இன்னும் 17 நாட்கள் இருப்பதால் பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.