
நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (30 வயது). விளம்பர பேனர்கள் அமைக்கும் தொழிலாளி.
இவர் நேற்று மதியம் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகில் சாலையோரம் விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருடன் ராஜபதியைச் சேர்ந்த சதீஷ்முருகன் (30 வயது) என்பவரும் வேலை செய்தார். அப்போது அங்கு மின்மாற்றி அருகில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனரை வேறு இடத்தில் மாற்றி வைக்க ஏற்பாடு செய்தனர்.
அந்த பேனரை பேச்சிமுத்து, சதீஷ்முருகன் ஆகியோர் தூக்க முயன்றனர். அப்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக மின்மாற்றியில் உரசியது. இதனால் அவர்கள் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பேச்சிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கையில் காயமடைந்த சதீஷ் முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.