சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை-2025 என்ற திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 29ம் தேதி வரை பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், மற்றும் முதல்வரின் தனி செயலாளர்கள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் சுமார் 40 நிமிடம் நடைபெற்றது.
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட உள்ள தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறைக்கான ஒரு முக்கிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இன்று நம்பர் ஒன் மாநிலமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் திகழ்கிறது. இதை இப்போது, அடுத்த கட்டத்துக்கு வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற முறையில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை-2025 தமிழ்நாடு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில் முக்கிய இலக்காக அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், விண்வெளி துறைக்கு தகுதிவாய்ந்த, திறமையான ஆட்களை உருவாக்குதல் என்ற 3 இலக்குகளுடன் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. நாம் உற்பத்தி துறையில் மட்டும் கவனத்தை செலுத்துவோம். இனி, விண்வெளி துறையிலும் கவனம் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பை முதல்வர் உருவாக்கி கொடுத்திருக்கிறார். இதில் ரூ.25 கோடியில் செயல்படும் சிறிய கம்பெனிகளுக்கும் மிகப்பெரிய ஊக்கம் வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளி துறை ஒவ்வொரு நாளும் அதிவேகத்தில் போய் கொண்டிருக்கிறது. அதிலும் இப்போது உலக அளவில் எலான் மஸ்க் நிறுவனம் பெரிய அளவில் உள்ளது. அதற்கு போட்டியாக, இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஸ்பேஸ் டெக் பணிகளை செய்ய இருக்கிறோம். இளம் தலைமுறையினர் இதன்மூலம் ஊக்குவிக்கப்படுவார்கள். 50 சதவீதம் சலுகைகளை அரசாங்கமே கொடுக்கும். ரூ.300 கோடிக்கும் மேலான நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஸ்பேஸ் பே என்று அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் முதலீடுகள் வருமானால் அதற்கு சிறப்பு பேக்கேஜ் கொடுக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊதியம் மானியமாக முதலாம் ஆண்டு 30 சதவீதம், 2ம் ஆண்டு 20 சதவீதம், 3ம் ஆண்டு 10 சதவீதம் ஊக்கத்தை இந்த பாலிசி வழங்கும். மொத்தமாக பார்த்தால், தமிழகத்தில் ஒரு புதிய ஸ்பேஸ் செட்டரில் இது ஒரு பொன்னான நாள் என்று சொல்ல வேண்டும். இளம் தலைமுறையினர் மற்றும் உலகளவில் இருக்கும் பல தொழில்முனைவோர்களும் இனி தமிழகத்தை நோக்கி வருவார்கள். தென்தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். பிற பகுதிகளில் இருக்கும் ஸ்பேஸ் டெக் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வரும். இதில் வரும் வேலைவாய்ப்புகள் படித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய பயன் அளிக்கும். அதிக சம்பளமும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post விண்வெளி தொழில் கொள்கை ரூ.10,000 கோடி முதலீடு 5 ஆண்டுகளில் கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.