
பெங்களூரு,
5 அணிகள் இடையிலான 3-வது பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி), முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 81 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 50 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஜார்ஜியா வார்ஹாம் 3 விக்கெட்டுகளும், கிம் கார்த் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களின் ஆர்சிபி.. ஆர்சிபி.. என்ற கோஷம் விண்ணைப்பிளக்கும் அளவுக்கு சத்தமாக இருந்தது. இந்த சத்தம் தாங்க முடியாமல் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் காதை மூடிக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.