
கோவை
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது பக்தர்களால் முருகப் பெருமானின் 7-வது படை வீடு என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து மருதமலையில் இந்த ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. மேலும் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருதமலையில் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
கும்ப அலங்காரம்
தினமும் காலை முதல் கால வேள்வி, 2-ம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி நடைபெற்றது. திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத் தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மருதமலைக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.
தொடர்ந்து கோவிலில் கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் மற்றும் 4-ம் கால வேள்வி, 5-ம் கால வேள்வி, இறைவனின் அருட்கலைகளை நாடியின் வழியே எழுந்தருள செய்தல், பேரொளி வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமுறை பாராயணம், 6-ம் கால வேள்வி, காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க அர்ச்சகர்கள் திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மருதாச்சல மூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது கோபுர கலசங்கள் மீது டிரோன் மூலம் மலர் தூவப்பட்டது.
விண்ணை தொட்ட அரோகரா கோஷம்
கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியதும், அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... மருதாசல மூர்த்திக்கு அரோகரா... என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்களின் இந்த கோஷம் விண்ணை தொடும் வகையில் இருந்தது. தொடர்ந்து டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சல மூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதைத்தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி வள்ளி- தெய்வானையுடன் வீதி உலா வந்தார்.
விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
திருமுறை பாராயணம்
விழாவில் திருமுறை பாராயணம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஒதுவார்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செவ்வாய் இராக்கால அபிஷேக பக்தர்கள் குழு தலைவர் கணுவாய் தேவராஜ், செயலாளர் சிவமுருகன், துணை தலைவர் பழனிவேல் மற்றும் உறுப்பினர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர் திலகவதி சண்முகசுந்தரம், மாதம்பட்டி தங்கவேல், மனோகரன், நேர்டு காமராஜ், சிவசாமி, விபூதி முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஜெயகுமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் துணை ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் செய்து இருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்க ளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
டிரோன் மூலம் புனித நீர்
கும்பாபிஷேகம் முடிந்ததும் கலசங்களில் இருந்த புனித நீர் அங்கிருந்த டிரம்களில் உள்ள தண்ணீருடன் கலக்கப்பட்டது. பின்னர் டிரோன்கள் மூலம் அந்த புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. இதன்காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவது தடுக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பலர் பாட்டில்களில் புனித நீரை பிடித்து தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். இதுதவிர கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசங்களில் டிரோன்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
பிரம்மாண்ட திரைகளில் ஒளிபரப்பான கும்பாபிஷேகம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை காண கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மருதமலையில் திரண்டனர். இதையடுத்து பக்தர்கள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்மே மலை மீது ஏற அனுமதிக்கப்பட்டனர். மலைஅடிவாரம், படிக்கட்டுகள் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் வசதிக்காக பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் நெரிசல் தவிர்க்கப்பட்டது.