புதுடெல்லி,
பிரதமர் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்று கிழமையில் பொதுமக்களுடன் உரையாடும், மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். இதன்படி, 118-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, நீங்கள் ஒரு விசயம் கவனித்து இருப்பீர்கள். மாதத்தின் கடைசி ஞாயிறன்று மன் கி பாத் நடைபெறும்.
ஆனால் இந்த முறை, 4-வது வாரத்திற்கு பதிலாக, ஒரு வாரத்திற்கு முன்பே, மாதத்தின் 3-வது வாரத்தில் நாம் சந்திக்கிறோம். ஏனெனில், அடுத்த ஞாயிற்று கிழமை குடியரசு தினம் வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை நான் முன்பே தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இந்த குடியரசு தினம் சிறப்பு வாய்ந்தது. இந்திய குடியரசின் 75-வது ஆண்டு தினம் இதுவாகும். நாட்டின் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75-வது ஆண்டை இந்த வருடம் குறிக்கிறது.
நமக்கு புனித அரசியலமைப்பை வழங்கிய அனைத்து அரசியலமைப்பு உறுப்பினர்களான சிறந்த தலைவர்கள் அனைவருக்கும் தலைகுனிந்து என்னுடைய வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
விண்வெளியில் செடிகளை வளர செய்வதற்கான முயற்சியில் ஈடுபடும் நம்முடைய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருங்காலத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகின்றனர் என அவர்களை பாராட்டினார்.
டிசம்பர் 30-ந்தேதி விண்வெளிக்கு காராமணி விதைகள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவை முளைத்தன. எதிர்காலத்தில் விண்ணில் காய்கறிகள் வளர செய்வதற்கான ஓர் உந்துதல் ஏற்படுத்தும் பரிசோதனையாக இது அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.