சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு கையகப்படுத்த இருக்கும் இடங்கள் விளை நிலங்களாகவும், ஏரி, குளங்களாக இருப்பதால் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இதில் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுவதால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தீவிர போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பொதுமக்களின் போராட்டம் 900 நாட்களாக நடந்து வருகிறது. இதனால் போராட்டம் நடந்து வரும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நாளை(திங்கட்கிழமை) விஜய் சந்திக்க இருக்கிறார். இதற்கான அனுமதியை போலீசார் வழங்கியுள்ளனர். அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால் அதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் வைத்து தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கேரவனில் இருந்தபடியே விஜய் உரையாற்ற உள்ளார். மக்களை சந்திப்பதற்கான இடத்தை முடிவு செய்வது பற்றி நீண்ட இழுபறி நிலவி வந்த நிலையில், அம்பேத்கர் திடல் தேர்வு செய்யப்பட்டது.