டெக்சாஸ்:
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது முன்மாதிரி ராக்கெட்டான ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது. அவ்வகையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.
முந்தைய சோதனை விண்கலத்தை போலவே, இதுவும் குறிப்பிட்ட ஒரு சுற்றுப்பாதையில் பறக்கவிருந்தது. பயிற்சிக்காக இந்த விண்கலத்தில் 10 டம்மி செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டிருந்தன. வெற்றிகரமாக புறப்பட்ட ராக்கெட்டில் இருந்து விண்கலம் உள்ள தொகுதி தனியாக பிரிந்ததும் பூஸ்டர் (சூப்பர் ஹெவி முதல் நிலை பூஸ்டர்) திட்டமிட்டபடி ஏவுதளத்திற்கு திரும்பியது. ஏவுதளத்தில் உள்ள பிரமாண்ட எந்திர கைகள், பூஸ்டரை பிடித்து நிறுத்தின. இந்த காட்சி காண்போரை பிரமிக்க வைத்தது.
ஆனால், உயரே சென்ற ஸ்டார்ஷிப் விண்கலம், திடீரென தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. சிறிது நேரத்தில் விண்கலம் வெடித்து சிதறியது. இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விண்கலம் வெடித்து சிதறி அதன் குப்பைகள் பூமியை நோக்கி விழும் காட்சியை விமானத்தில் இருந்தபடி சில பயணிகள் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஸ்டார்ஷிப் விண்கலம் பறக்கத் தொடங்கிய 8.5 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பை இழந்ததாகவும், ஸ்டார்ஷிப் விண்கலம் நொறுங்கிவிட்டதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.
இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "வெற்றி என்பது நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி" என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் கசிவினால், என்ஜின் பயர்வாலுக்கு மேலே உள்ள குழியில் அழுத்தம் உருவாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தரவுகள் தெரிவிப்பதாக எலான் மஸ்க் கூறி உள்ளார். காற்றோட்டத்தை அதிகரிப்பது மற்றும் கசிவுகளை இருமுறை சரிபார்ப்பதுடன், தீயை கட்டுப்படுத்தும் அம்சங்கள் அந்தப் பகுதியில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியதை தொடர்ந்து விண்கல குப்பைகளால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, அந்த வழியாக சென்ற விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.