
சென்னை,
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்து இயக்க மனோஜ் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணம் திரையுலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் பாக்கியராஜ், வெற்றிமாறன், ராம், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மின்மயானத்தில் அவரின் இரு மகள்களும் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மகனின் பிரிவால் மனமுடைந்து வாடிய பாரதிராஜாவை அவரின் உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்தனர். இறுதிச்சடங்கில் பாக்கியராஜ், வைரமுத்து, சீமான், இளவரசு, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.
வாழ்க்கை குறிப்பு
மனோஜ் சினிமாவில் மணிரத்னம், ஷங்கர் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ரஜினியின் எந்திரன் படத்திலும் உதவி இயக்குனராக இருந்தார். 1999-ல் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை பாரதிராஜவே இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
மேலும் பாரதிராஜா இயக்கிய ஈர நிலம் மற்றும் அல்லு அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், சாதுரியன், பேபி படங்களிலும் கதாநாயகனாக நடித்து இருந்தார். ஆனாலும் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் கதாநாயகனாக நீடிக்க முடியவில்லை.
இதையடுத்து சரத்குமார், முரளியுடன் இணைந்து சமுத்திரம் படத்தில் நடித்தார். பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் முரளியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது,
காதல் திருமணம்
அன்னக்கொடி, வாய்மை, சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்த மார்கழி திங்கள் படத்தை மனோஜ் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
சாதுரியன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மலையாள நடிகை நந்தனாவை காதலித்து 2006-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஷிதா, மதிவதனி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் ஆகியோரும் மனோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.