
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆன குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 38 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்துள்ளது. சாய் சுதர்சன் 62 ரன்களுடனும், ரூதர்போர்டு 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் 19 ரன்கள் அடித்திருந்தபோது அகமதாபாத் மைதானத்தில் 1,000 ஐ.பி.எல். ரன்களை கடந்தார். 20 இன்னிங்ஸ்களில் அவர் இந்த 1,000 ரன்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 1,000 ரன்களை வேகமாக கடந்த வீரர்களின் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த டேவிட் வார்னரை (22 இன்னிங்ஸ்கள்) பின்னுக்கு தள்ளினார்.
அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில் - 19 இன்னிங்ஸ்கள்
2. சுப்மன் கில் - 20 இன்னிங்ஸ்கள்
3. டேவிட் வார்னர் - 22 இன்னிங்ஸ்கள்
4. ஷான் மார்ஷ் - 26 இன்னிங்ஸ்கள்