விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடைகோரி ஐகோர்ட்டில் வழக்கு

3 months ago 8

சென்னை: சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எஸ்.பி.ஆதித்தனாரால் நாம் தமிழர் கட்சி கடந்த 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்னர் திரைப்பட இயக்குநர் சீமான் 2010ம் ஆண்டு முதல் தலைமை ஒருங்கிணைப்பாளராக கட்சியை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், எல்.டி.டி.இ மற்றும் இலங்கை அரசுக்கும் இடையே 2009ம் ஆண்டு போர் நடந்தபோது, எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சீமான் போர் முனையில் நேரில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்புக்கு பின் ஏ.கே.47 ரக துப்பாக்கியில் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பொது வெளியில் சீமான் பேசி வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, பிரசாரத்திற்கு தமிழகம் வந்தபோது குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இதையடுத்து எல்.டி.டி.இ அமைப்புக்கு இந்தியாவில் தடை விதித்ததுடன், கடுமையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்தது. ஒன்றிய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இலங்கை போர் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையிலும், “மார்பிங்” செய்யப்பட்ட புகைப்படங்களை சீமான் பயன்படுத்தி வருகிறார்.

எல்.டி.டி.இ அமைப்புக்கு தடை விதித்திருக்கும் போது, அனைத்து தேர்தல் பிரசாரங்களிலும் பிரபாகரனின் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார். பிரபாகரனுடன் தான் இருப்பது போலவும், ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருப்பது போலவும் மார்பிங் செய்து படங்களை பயன்படுத்தி வருகிறார் என்று எல்.டி.டி.இ அமைப்பு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். அதனால், தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடைகோரி ஐகோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article