
சென்னை,
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன என்பதை இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் படத்தில் நடிக்க விரும்புவதாக அஜித் சார் அடிக்கடி என்னிடம் கூறுவார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த செய்தி அவரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியவை. அதனால், அதுபற்றிய வலுவான செய்தி இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
இருப்பினும், ரசிகர்கள் சில கமர்ஷியல் விஷயங்களை எதிர்பார்ப்பார்களே எனத் தோன்றியது. "சரியான படத்தில் நடிக்கும்போது என் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என அஜித் சார் கூறினார். அந்த நம்பிக்கை சரியானது என படம் வெளியானதும் நான் உணர்ந்தேன்' என்றார்.