பெங்களூரு: மாணவர்கள் சிறந்த விண்வெளி விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் உருவாக வேண்டுமென்றால், நல்ல தரமான கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு படிப்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசினார். இஸ்ரோவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி திட்டத்தின் (ஸ்டார்ட் – START) 3ம் எடிஷன் மெய்நிகர் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய சோம்நாத், ஜனவரி 9 முதல் 29ம் தேதி வரை நடக்கும் ’ஸ்டார்ட்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற இந்த ஆண்டு 500 கல்வி நிறுவனங்களில் பயிலும் 20,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
பிரபஞ்சத்தின் மர்மங்கள் இயற்கையாகவே கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாறினாலும், விண்வெளி அறிவியல் என்பது சென்சார்களை உகந்ததாக வடிவமைக்க மற்றும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளை உருவாக்குவதாகும். இந்த ஸ்டார்ட் திட்டம் அனைத்தைப் பற்றியும் பேசக்கூடியதாகும். எங்களது அற்புதமான விண்வெளி பயணங்களைப் பற்றி பேசுவோம். ஆனால் ராக்கெட்டுகளை எவ்வாறு விண்ணில் ஏவுவது, விண்வெளி சுற்றுப்பாதைகள் பற்றியும் எடுத்துரைப்போம்.
விண்வெளி அறிவியல் என்பது வானியலாளர்களாக மாறுவதற்கான உற்சாகம் மட்டுமல்ல; சிக்கலான மற்றும் நேரத்தை செலவழிக்கும் அறிவியலை உள்ளடக்கியது என்றும், பல ஆண்டுகளாக தொடர்ந்தால் மட்டுமே நிபுணத்துவம் அடைய முடியும். மாணவர்கள் தங்களுக்கு எதில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதில் நிபுணத்துவம் பெற வேண்டும். ஒரு சிறந்த விண்வெளி விஞ்ஞானி அல்லது பொறியாளராக நல்ல தரமான கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து அந்த கல்வி நிறுவனங்களில் படிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவது மிகவும் முக்கியம் என்று கூறினார்.
The post விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் உருவாக நல்ல தரமான கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து படிப்பது அவசியம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவுரை appeared first on Dinakaran.