
சென்னை,
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் வருகின்ற 23ம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சண்முக பாண்டியன், பிரேமலதா விஜயகாந்த், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் "விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம். மீண்டும் கேப்டனை திரையில் காண்பிப்போம்" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் பேட்டியளித்த சண்முகப் பாண்டியன், தனது தந்தை விஜய்காந்த் நடித்த சத்ரியன், ரமணா போன்ற படங்களில் தான்நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். எங்க அப்பா உதவி செய்த பலர் எனக்கு உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு அப்படி ஏதாவது உதவி தேவைப்படும்போது கண்டிப்பாக அவர்களிடம் கேட்பேன் என்றார். மேலும், கேஜிஎப் மாதிரியான திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறிய அவர், தனது தந்தையை போல போலீஸ், ஆர்மி மேன் ரோல்களிலும், ராஜா ரோல்கள் கிடைத்தாலும் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.