
சென்னை,
இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுந்தர். சி. மணிவண்ணன் இயக்கிய வாழ்க்கைச் சக்கரம் திரைப்படத்தில் காவலராக நடிப்பில் அறிமுகமானார். பின், 1995ம் ஆண்டு வெளியான 'முறை மாமன்' படத்திலிருந்து இயக்குநராக சினிமாவில் தன் பயணத்தைத் துவங்கினார்.தொடர்ந்து, 90-களின் இறுதிக்குள் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தார். அதன்பின், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம் என தொடர்ந்து நாயகனாக நடித்து அதில் வெற்றியும் பெற்றார். நகரம் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல பாராட்டுகளையும் பெற்றது. இதற்கிடையே, திரைப்படங்களையும் இயக்கிவந்தார். 2000-க்குப் பின் வின்னர், கிரி, அன்பே சிவம், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களையும் இயக்கினார்.
முக்கியமாக, அரண்மனை என்கிற பேய் படத்தின் 4-ஆம் பாகம் வரை இயக்கி வசூல் ரீதியாகவும் அவற்றை வெற்றிப்படங்களாக மாற்றினார். தற்போது, நயன்தாரா நாயகியாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் - 2 படத்தை இயக்கி வருகிறார். அரண்மனை - 5 படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகளில் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சுந்தர். சி திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததால் சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். சினிமாவில் 10 ஆண்டுகளைக் கடப்பதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் காலத்தில் மிகச் சிலரே நீண்டகாலம் தாக்குப்பிடிக்கின்றனர். அப்படி, தன் நகைச்சுவையான கதைக்களத்தை உறுதியாக நம்பி தொடர்ந்து பொழுதுபோக்கு திரைப்படங்களைக் நிறைவுசெய்தது திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர் சி திரைத்துரையில் கால் பதித்து 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'மூக்குத்தி அம்மன் 2' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.