
குவட்டா,
பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்து மோதல் போக்கு காணப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தானை பிரித்து தரும்படியும், பாகிஸ்தானின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பலூச் விடுதலை படை (பி.எல்.ஏ.)செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் 11-ந்தேதி ரெயில்வே தண்டவாளங்களை வெடிக்க செய்தும், துப்பாக்கி முனையிலும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பி.எல்.ஏ. கடத்தி சென்றது. அந்த ரெயிலில் 450 பயணிகள் இருந்தனர். எனினும், அவர்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த 100-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக சிறை பிடித்து வைக்கப்பட்டனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தின் குவட்டா மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர் ஆகிய நகரங்களை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இணைக்கிறது. இந்த நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுரங்கப்பாதை அருகே ரெயிலை நிறுத்திய பி.எல்.ஏ. படை அதனை கடத்தி சென்றது.
ரெயிலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போலீசார், உளவுத்துறை அதிகாரிகளும் பயணித்துள்ளனர். அவர்களும் பணய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பயணிகள் பலர் மீட்கப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
இந்த சூழலில், பி.எல்.ஏ.வின் ஊடக பிரிவான ஹக்கல், 35 நிமிடங்கள் ஓட கூடிய தர்ரா-இ-போலன் 2.0 என்ற புதிய வீடியோவை வெளியிட்டு உள்ளது. ரெயில் கடத்தலை கொடூர சம்பவம் என பாகிஸ்தான் ராணுவம் கூறியதற்கு முற்றிலும் வேறுபட்ட வகையில் வீடியோ உள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக கடத்தல் பகுதியில் இருந்து வேறிடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
வீடியோவில் போராளி ஒருவர் கூறும்போது, துப்பாக்கியை தடுத்து நிறுத்த ஒரு துப்பாக்கியே தேவையாக உள்ளது. தயக்கமோ மற்றும் தங்களுடைய வாழ்க்கையை பற்றிய கவலையோ எதுவும் இன்றி எதிரியை தாக்குவது என பலூச் இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். ஒரு மகன் வாழ்வை தியாகம் செய்ய தந்தையை விட்டு செல்கிறார் என்றால், அந்த மகன் தியாகம் செய்ய செல்வதற்காக, தந்தையும் மகனை பிரிகிறார் என கூறியுள்ளார்.
200 பாகிஸ்தான் அதிகாரிகளை, 2 நாட்களாக பணய கைதிகளாக வைத்திருப்பதற்கு முன், தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அதனை தகர்த்து, ரெயிலை கடத்திய விவரங்களை வீடியோ காட்டுகிறது.
பாகிஸ்தான் ராணுவமோ 30 மணிநேர முற்றுகை மற்றும் தாக்குதலில் 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்தது. 23 வீரர்கள், 3 ரெயில்வே ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் மட்டுமே பலியானார்கள் என்றும் தெரிவித்தது. ஆனால், பலூச் படையோ, ரெயில் கடத்தலில் பணய கைதிகளாக சிக்கிய 214 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என தெரிவித்துள்ளது.
பி.எல்.ஏ. படைக்கு பெரிய இழப்பு என பாகிஸ்தான் ராணுவம் கூறியிருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக படை, பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பி.எல்.ஏ. வெளியிட்டு உள்ளது. குறைந்த அளவிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என வீடியோ தெரியப்படுத்துகிறது. தங்களுடைய நடவடிக்கையின் பலம் என்னவென்றும் உறுதிப்படுத்தி உள்ளது.
பலூசிஸ்தானில் பி.எல்.ஏ. படையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதுடன், அவர்களுடைய வளர்ச்சியையும் வெளிப்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு சவால் விட்டுள்ளது.