விஜய் மாநாடு: மேலும் 5 கேள்விகள் எழுப்பி காவல்துறை நோட்டீஸ்

1 month ago 12

சென்னை,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் நினைவாக, மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. 27-ம் தேதி மாநாடு தொடங்கும் முன்பு திடலின் எதிரில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார்.

இந்த சூழலில் மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன் தினம் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக மாநாடு பணிக்கான 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நேற்று நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது. இது தொடர்பான அந்த நோட்டீசில், வரும் 27-ம் தேதி மாநாடு நடக்கும்போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்..?.. வாகனம் நிறுத்தும் இடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை... தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உடனடியாக தேர்வு செய்து, அதற்கான வரைபடங்களை ஒப்படைக்க வேண்டும். மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்த வகையான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டியே காவல்துறைக்கு தர வேண்டும் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17-ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுத்திய காவல்துறை, மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article