
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான 'ஏஸ்' ரிலீசுக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'ஏஸ்' படம் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் 'ஏஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த், "'ஏஸ்' என்னுடைய முதல் தமிழ் படம். எல்லாருக்குமே முதல் படம் என்றால் மிகவும் ஸ்பெஷலானதுதான். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சாருடன் சேர்ந்து நடிப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். 'ஏஸ்' ஒரு காமெடியான குடும்பத் திரைப்படம். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். இதற்கு முன் சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக காமெடியான ஜானரில் நடித்திருக்கிறேன். முதல் தமிழ் படம் என்பதால் டயலாக் பேசுவதற்குச் சிரமமாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் பொறுத்துக்கொண்டு மிகவும் பொறுமையாக இருந்தார்கள். அதற்காகப் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.