
காஷ்மீரில் உள்ள பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில், துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து அந்த நாடுகளுக்கு சமூக வலைதளங்களில் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து அந்நாடுகளில் படப்பிடிப்புகளை நிறுத்துமாறு திரைத்துறையை வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஷியாம்லால் குப்தா கூறும்போது, "இந்திய திரைப்படங்களை துருக்கியிலோ, அஜர் பைஜானிலோ படமாக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்திய சினிமாவில் பணிபுரிந்தால், அவர்களின் விசாக்களை ரத்து செய்ய வேண்டும். இந்த விஷயம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கும் கடிதம் எழுத இருக்கிறோம்" என்றார்.
பெரும்பாலான இந்தி படங்களின் படப்பிடிப்புகள் துருக்கியிலும் அஜர்பைஜானிலும் நடந்துள்ளன. தமிழில் அஜித்தின் 'விடாமுயற்சி' அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.