
புதுடெல்லி,
நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். அதில், இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இதுதவிர, உலகளாவிய மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில் பரஸ்பர நலன்களை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
நடப்பு ஆண்டின் மே மாதத்தில், ஜெர்மனியின் புதிய அதிபராக பிரெட்ரிக் மெர்ஸ் பதவியேற்ற நிலையில், மத்திய மந்திரியின் ஜெர்மனி பயணம் அமைந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் ஒரு பகுதியாக இந்த 3 நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தின. இந்த 3 நாடுகளுடனும் இந்தியா இனிமையான மற்றும் நட்பு முறையிலான உறவை கொண்டிருக்கிறது.