
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே 19(1)(ஏ) என்ற மலையாள படத்தில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு "ஆகாச வீரன்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி இந்த படத்தின் டைட்டில் டீசர் நாளை மறுநாள் (மே 3) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.