
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
கூலி உயர்வு கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் பலநூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அத்தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை நடைபெற்ற பத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்திருக்கும் நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேறு வழியின்றி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக கூலிக்கு நெசவு தொழில் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் அடங்கிய பேச்சுவார்த்தையை உடனடியாக ஏற்பாடு செய்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.