
திருப்பதி:
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர், நரசிம்ம அவதாரத்தை உணர்த்தும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதா, லட்சுமணருடன் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நான்காம் நாளான இன்று காலையில் கல்பவிருட்ச வாகனத்தில் கோதண்ட ராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணர் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வாகன சேவைக்கு முன்னால் சிறுமிகள், பெண்கள் கோலாட்டம், குழு ஆட்டம், பரத நாட்டியம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.