குடும்ப தகராறு: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் சிகிச்சை

2 days ago 3

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வலங்கைப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40 வயது). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி மகேஷ் (34 வயது). இவர்களுக்கு சுதர்சன் (6 வயது), முகிலன் (2 வயது) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மகேந்திரன், மனைவி மகேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மகேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) தனது 2 குழந்தைகளுக்கும் குடிக்க கொடுத்துவிட்டு, அதனை தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் குழந்தைகள் அலறி துடித்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, மகேஷ் மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article