புதுச்சேரி, ஜன. 23: புதுச்சேரியில் புதிதாக மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்துள்ள விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரசார் கவர்னரை சந்தித்து புகார் மனு அளித்தனர். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சீனியர் துணைத்தலைவர் தேவதாசு உள்ளிட்ட நிர்வாகிகள் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ்- பிஜேபி அரசு 8 அயல்நாட்டு மதுபானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தற்போது அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க அப்போதைய கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதற்கிடையே திடீரென 8 மதுபான தொழிற்சாலைக்கு திட்டக்குழுமத்தின் அனுமதியும், தொழிற்துறையின் முதல் கட்ட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு கவர்னர் ஒப்புதல் பெறாததால், தற்போது அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஊழல் நடந்திருப்பதாக கருதுகிறோம். சட்டமன்றத்திலேயே பாஜவின் எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஒவ்வொரு ஆலையிடம் இருந்தும் ₹10 கோடி லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு முதல்வர் அமைச்சர்கள் என யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏற்கனவே அதிக நீர் உறிஞ்சும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை என்பதை மீறி தற்போது அனுமதி தரப்பட்டுள்ளது. பி பி ஏ அனுமதி, யாரின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டது.
இதற்காக குளோபல் டெண்டரை ஏன் வைக்கவில்லை? ரகசியமாக ஆலைகளுக்கு அனுமதி கொடுப்பது ஏன்? இதன் மூலம் பல கோடி ஊழல் செய்வதற்கு ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மதுபான தொழிற்சாலை அமைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் அனுமதி அளிக்க கூடாது. எனவே இதன் உண்மை நிலை அறிய சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும். தொழில் நுட்ப பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எதிர்கட்சி தலைவர் முழுமையாக உண்மை அறிந்து பேச வேண்டும். அதேபோல் நாங்கள் திமுகவினரை இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்த அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் appeared first on Dinakaran.