
டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் - பவ்யாதிரிகா நடிப்பில் 'ஜின் தி பெட்' என்ற படம் உருவாகி இருக்கிறது. இதன் பட விழாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசும்போது, "ஒரு படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு படமும் இயக்குனருக்கு குழந்தை மாதிரி.
நடிகர்களும், நடிகைகளும் ஒருகட்டத்துக்கு மேல், அதாவது வளர்ந்து விட்ட பிறகும், பழைய மாதிரி அன்புடனும், மரியாதையுடனும், நட்பாகவும், பணிவாகவும் இருக்க வேண்டும். நடிகரோ, நடிகையோ மேலாளர்கள் மூலமாக கதைகளை கேட்காதீர்கள். இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மூலமாக கதையை கேளுங்கள்.
என்றைக்கு மேலாளர்கள், உதவியாளர்கள் மூலமாக நடிகர், நடிகைகள் கதைகள் கேட்க தொடங்கினார்களோ, அப்போதே சினிமா மோசமாகி விட்டது. கதை கேட்கும் இடத்தில் சினிமாவில் தோல்வி அடைந்தவர்கள்தான் இருக்கிறார்கள். வெற்றி பெற்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை. தனக்கு 'சலாம்' அடிக்கிறவர்களை மட்டுமே, அவர்கள் ஹீரோக்களிடம் அழைத்து செல்கிறார்கள். எனவே பழையபடி சினிமா இருக்கவேண்டும். நடிகர், நடிகைகளுடன், தொழில்நுட்ப கலைஞர்கள் நேரடி நட்பாக இருக்க வேண்டும். அந்த நட்பு இல்லாவிட்டால் படங்கள் ஜெயிக்காது" என்று கூறினார்.