
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை மறுநாள் (மே 24 ஆம் தேதி) ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.