தீபாவளி… இந்த பெயரை உச்சரித்தாலே மனதுக்குள் மத்தாப்புகள் சிதறும். உதிரும் நட்சத்திரங்கள் போல வாண வேடிக்கையால் வானமே வண்ணமயமாகும். இனிப்பு, கார பலகாரங்களுடன், புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுவது குதூகலம் தரும். அதுவும் பிழைப்புக்காக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்றவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து தீபாவளியை குடும்பம், உறவினர்களுடன் கொண்டாடித் தீர்ப்பார்கள்.
இந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் எத்தனையோ பேரின் உழைப்பும், தியாகமும் அடங்கியிருக்கிறது. இந்திய அளவில் 90 சதவீத பட்டாசு தேவையை ‘குட்டி ஜப்பான்’ எனப்படும், சிவகாசி தான் தீர்த்து வைக்கிறது. இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில், பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். உயிரை பணயம் வைத்த இவர்களின் கடின உழைப்பால், சுமார் 450க்கும் மேற்பட்ட வெடி வகைகள் தயாராகி விற்பனையாகி விட்டன. அயராத இவர்களது உழைப்பால், பட்டாசு வர்த்தகம் நடப்பாண்டில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதால் வியாபாரிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
பல ஆயிரம் கோடி விற்பனையானது வர்த்தகரீதியாக பலம் தந்தாலும், வெடிக்கும்போது கட்டாயம் கவனம் தேவை. வெடிக்காத பட்டாசுகள் அருகே செல்ல வேண்டாம். பற்ற வைத்ததும் பாதுகாப்பான தூரம் செல்ல வேண்டும். பக்கத்தில் நிற்கக்கூடாது. கூட்டமாக சேர்ந்து வெடிக்கக்கூடாது. வெடிகள் வெடித்து சிதறும் இடத்தில் மற்ற பட்டாசுகளை வைக்கக்கூடாது. முதலுதவி பெட்டி உடனிருப்பது அவசியம். விபத்தில் காயமடைந்தால் தீத்தடுப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை தீயணைப்புத்துறையினர் வழங்கியுள்ளனர்.
எனவே, இதனை கட்டாயம் பின்பற்றி பட்டாசு வெடிப்பது நமக்கும் பாதுகாப்பு தானே? அதேநேரம் முடிந்தவரை, நம் வீட்டருகே உள்ள உடல்நலம் பாதித்தவர்கள், முதியவர்கள், வளர்ப்புப் பிராணிகளின் நலனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். பட்டாசு விற்பனை மட்டும் டாப் அல்ல… ஆடை வர்த்தகமும் அசர வைக்கிறது. உள்நாட்டு ஆடை வர்த்தகமே சுமார் ரூ.6 ஆயிரம் கோடியை தாண்டி மிரள வைத்துள்ளது. இதனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட ஆடை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாவட்டங்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றன.
குடிசைத் தொழில் முதல் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் இனிப்பு, கார வகைகளின் விற்பனையும் களைகட்டியுள்ளது. கடந்தாண்டில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரை விற்ற பலகாரங்கள், நடப்பாண்டில் ரூ.5 ஆயிரம் கோடியை தொட்டு விட்ட ஸ்வீட் தகவல் வெளியாகியுள்ளது. வெடி இல்லாத தீபாவளி கூட இருக்கும். கறி இல்லாத தீபாவளி இருக்குமா என்ன? தென்மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் ஆடு, கோழிகள் சந்தை விற்பனை மட்டும், ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தவிர ஓட்டல்களில் ஸ்பெஷல் பிரியாணி, அசைவ உணவு வகை ஆர்டர்களும் பல கோடியை தொடும். அது மட்டுமா? தீபாவளி போனஸ் பட்ஜெட்டில், டூவீலர், கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குபவர்கள் பட்டியலும் இங்கு அதிகம். மளிகை கடை பட்ஜெட் தனி. இப்படியாக, ஒரு பண்டிகையானது ஒட்டுமொத்தமாக எத்தனையோ பேரின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் ஒளி ஏற்றி வைக்கிறது. மனதிற்கு மகிழ்ச்சியையும் அள்ளித் தருகிறது. அப்படிப்பட்ட ஒரு இனிப்பான திருவிழாவை கொண்டாட தயாராகி இருக்கும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
The post வாழ்வும் ஒளிரட்டும் appeared first on Dinakaran.